Sunday, December 15, 2019

MYM - By A A Ravoof Sahib, editor Deccan Times - Article in The Hindu Tamil

எம்ஒய்எம் என்றொரு கனவு

mym-library

முகம்மது ரியாஸ்
மஃரிப் தொழுகை முடிந்து ஆட்கள் வரத் தொடங்கும் கொஞ்ச நேரத்தில் வாசிப்பறை நிறைந்திருக்கும். அதன் பெரிய பழங்கால மின்விசிறி சுழலும் ஓசையும், பக்கங்களைப் புரட்டும் சத்தமுமாக நூலகம் உயிர்கொள்ளும்!
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இருக்கிறது அந்த 80 வயது நூலகம். அது ஒரு இருமாடிக் கட்டிடம். கீழ்தளத்தில் கடைகள், மேல்தளத்தில் நூலகம். என் பள்ளிப் பருவத்தில், ஊரிலுள்ள பொது நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்தேன். ஊரிலேயே அது ஒன்றுதான் நூலகம் என்பதாக நினைத்திருந்தேன். ஒருநாள் நண்பனொருவன், “நம்மூர்ல தனியார் லைப்ரரி இருக்கு தெரியுமா?” என்று கேட்டான். அங்கு நிறைய புதிய புத்தகங்கள் இருப்பதாகவும், மாதம் ஐந்து ரூபாய் சந்தா என்றும் சொன்னான். அவன் கூறும் இடத்தை இஸ்லாமிய நூல்கள் அடங்கிய ஒரு படிப்பரங்கமாகவே புரிந்து வைத்திருந்தேன். ஆனால், அப்படியல்ல. அந்த நூலகத்தைப் பார்க்க நேரும் ஒரு புதிய வாசகன் தனது வாசிப்பின் அடுத்தகட்டம் இங்கிருந்து தொடங்கிவிடும் என்பதை உணர்ந்துகொள்வான். அந்நூலகத்தின் பெயர் எம்ஒய்எம் - முஸ்லிம் யூத் மஜ்லிஸ்.
நூலகம் காலை 9.30 மணிக்குத் திறக்கப்பட்டு மதியம் 12.30 வரை செயல்படும். அதன் பிறகு, மாலை 4.30 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 8.30 மணி வரை. என்னுடைய தேர்வு எப்போதும் மாலை நேரம்தான். 6 மணி அளவில் ஆட்கள் குறைவாக இருப்பார்கள். ஜன்னலோரம் அமர்ந்து இதழ்களைப் படிக்கத் தொடங்குவேன். மஃரிப் தொழுகை முடிந்து ஆட்கள் வரத் தொடங்கும் கொஞ்ச நேரத்தில், 25 பேர் அமர்ந்து படிக்கும் வசதியுள்ள அந்த வாசிப்பறை நிறைந்திருக்கும். அதன் பெரிய பழங்கால மின்விசிறி சுழலும் ஓசையும், பக்கங்களைப் புரட்டும் சத்தமுமாக நூலகம் உயிர்கொள்ளும்.
நூலகம் ஆரம்பிக்கப்பட்ட கதை
இந்த நூலகத்தின் வரலாறு அன்றைய காலகட்டத்தின் லட்சியவாதப் போக்கை உணர்த்தக்கூடியது. சுதந்திரப் போராட்டம் இந்தியாவெங்கும் தீவிரமடைந்துவந்த காலகட்டமான 1940-ல், கடையநல்லூரானது கல்வி அறிவிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியிருந்தது. கடையநல்லூரின் பிரதானத் தொழிலாக நெசவு இருந்தது. மிகக் குறைந்த கூலி; வறுமை. ஊரில் பள்ளிக்கூடம் இருந்தும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்ப முடியாத சூழ்நிலை.
இந்தக் காலகட்டத்தில் ஹைதராபாத்திலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ‘டெக்கான் டைம்ஸ்’ ஆங்கில இதழின் ஆசிரியர் ஏ.ஏ.ரவூப் இந்திய முஸ்லிம்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ‘முஸ்லிம் யூத்ஸ் மஜ்லிஸ்’ என்றொரு அமைப்பை உருவாக்க வேண்டுகோள் விடுக்கிறார். அதில் உந்தப்பட்ட கடையநல்லூர் வாழ் படித்த இளைஞர்கள் இங்கும் ‘எம்ஒய்எம்’ என்ற அமைப்பைத் தொடங்குகின்றனர். முதல் பணியாக, வீதி வீதியாகச் சென்று ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்துவரச் செய்யும் முயற்சியில் இறங்குகின்றனர். சமூக மாற்றக் கனவின் முதல் நகர்வு இவ்வாறாகத் தொடங்குகிறது. சிறுவர்களுக்கு மட்டுமல்ல, முதியவர்களுக்கும் கல்வியறிவு ஏற்படுத்துவது அவசியம் என்பதை உணர்ந்த அவர்கள், மஜ்லிஸின் வளாகத்திலேயே இரவு நேரப் பாடசாலையை அமைத்து முதியவர்களுக்கு எழுதப் படிக்க கற்றுத்தருகின்றனர். இந்த சமூகப் பணியை மேலும் விரித்தெடுக்க வேண்டிய நிலையில், நூலகம் ஒன்றைத் தொடங்கத் திட்டமிடுகின்றனர். சரியாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு, 1945-ல் எம்ஒய்எம் நூலகம் தொடங்கப்படுகிறது.
காந்தியின் அறைகூவல்
சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தின்போது சிறிய பிராந்தியங்கள் அளவில் இது ஒரு குறிப்பிடத்தக்க தொடக்கம் என்றால், இந்திய அளவில் ஒரு முக்கியமான தொடக்கம் 1920-ல் நிகழ்ந்தது. பிரிட்டிஷார் ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்துக்கு அழைப்பு விடுக்கிறார் காந்தி. காந்தியின் வேண்டுகோளை அடிப்படையாகக் கொண்டு மெளலான மஹ்மூது ஹசன், மெளலான முகம்மது அலி ஜவஹர், ஹக்கீம் அஜ்மல் கான், முக்தார் அகம்மது அன்சாரி, அப்துல் மஜீத் காஜா, ஜாகீர் ஹுசைன் ஆகிய தலைவர்கள் அலிகாரில் ‘ஜாமியா மில்லியா இஸ்லாமியா’ என்ற கல்வி அமைப்பைத் தொடங்குகின்றனர். இந்தக் கல்வி நிறுவனம் மீது காந்தி பெரும் பிரியம் கொண்டிருந்தார். தன் இறுதிக் காலம் வரை அதனுடன் தொடர்பில் இருந்தார். அவருடைய மகன் தேவதாஸ் காந்தி இங்கு ஆசிரியராக பணிபுரிந்திருக்கிறார். ஹரிலால் காந்தியின் மகன் ராசிக்லால் இங்குதான் பயின்றார்.
இந்தக் கல்வி நிறுவனம் பொருளாதாரரீதியாக சிக்கலைச் சந்தித்த நேரத்தில் காந்தி நிதி உதவி வேண்டி பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளார். அப்போது ஒருவர், அந்த நிறுவனத்தின் பெயரில் உள்ள ‘இஸ்லாமியா’ என்ற வார்த்தையை நீக்கினால் பலரும் உதவ முன்வருவார்கள் என்று காந்திக்கு ஆலோசனை கூறுகிறார். அதற்கு காந்தி சொல்கிறார், “இஸ்லாமியா என்ற வார்த்தை நீக்கப்படும் பட்சத்தில், அந்தக் கல்வி நிறுவனத்துடனான எனது உறவை முடித்துக்கொள்வேன். இந்நிறுவனம் இஸ்லாமிய அடையாளத்துடன் செயல்படுவதுதான் அதன் தனித்துவம்!”. காந்தி, இவ்வகையான கல்வி நிறுவனங்களின் வழியே முஸ்லிம்-இந்து உறவை வலுப்படுத்துவதைப் பெரும் கனவாகக் கொண்டிருந்தார். எம்ஒய்எம் தன் எல்லை அளவில் அந்தக் கனவை சாத்தியப்படுத்தியிருக்கிறது. முஸ்லிம்களின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எம்ஒய்எம் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், அது மதரீதியாகத் தன்னைக் குறுக்கிக்கொள்ளாமல் அனைவருக்குமானதாகத் தன்னை மாற்றிக்கொண்டது.
புத்தகங்களின் வழி உலகைத் திறத்தல்
இன்று தமிழ் இலக்கியத்தின் முகமாக அறியப்படும் அனைவரின் புத்தகங்களையும் அங்கு காண முடியும். ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’, பா.வெங்கடேசனின் ‘தாண்டவராயன் கதை’ என வெளிவந்த சமயத்தில் கவனிக்கப்படாமல்போன அரிதான புத்தகங்களும் இங்கே இருக்கின்றன. இன்று பெருநகரங்களின் அரசு நூலகங்களில்கூட சமகால எழுத்தாளர்களின் புத்தகங்களைக் காண்பது அரிது. ஆனால், இங்கு சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன் தொடங்கி சமீபமாக எழுதத் தொடங்கியவர்களின் புத்தகங்கள் வரை காண முடியம். தமிழ் இலக்கியம், இந்திய இலக்கியங்களோடு காப்ரியல் கார்சியா மார்க்கெஸ், மிலன் குந்தேரா, யோசா, இடாலோ கால்வினோ, நகிப் மஹ்ஃபூஸ், ஓரான் பாமுக், ஜான் பான்வில், சல்மான் ருஸ்தி என உலக இலக்கிய ஆளுமைகளின் நூல்களும் என இங்கு தற்சமயம் 12,000-க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன.
பெரும் கனவு
மாதம் ஒரு வாசகர் கூட்டம் நடத்தப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது. கலாப்பிரியா, முகம்மது மீரான் போன்றோர் பலமுறை இந்தக் கூட்டங்களுக்குத் தலைமை வகித்திருக்கின்றனர். ஒரு சிறுநகரில், அதுவும் சிறுபான்மைச் சமூகத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நூலகம், முன்மாதிரியான சமூக முன்னெடுப்பைச் சாத்தியப்படுத்திருக்கிறது என்றால், அதன் கனவு எவ்வளவு பெரியது?
தற்போது நூலகச் செயல்பாடுகளைக் கவனித்துவரும் சேயன் இப்றாகிம், “ஒவ்வொரு ஆண்டும் புத்தகத் திருவிழாவின்போது புதிய புத்தகங்களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். அனைத்து இலக்கிய இதழ்களும் இங்கு வாங்கப்படுவதால், அவற்றில் குறிப்பிடப்படும் சமகால முக்கியப் படைப்புகள் அனைத்தையும் தேடி வாங்கிவிடுகிறோம். தவிர, பலரும் தங்கள் புத்தகச் சேகரிப்பை நூலகத்துக்கு அன்பளிப்பாக வழங்குவதும் உண்டு. நிச்சயம் இந்த ஊருக்கு இது ஒரு பொக்கிஷம்தான். இப்படி ஒவ்வொரு சிறு நகரங்கள், கிராமங்களும் உயிரோட்டமான நூலகம் ஒன்றைக் கையில் கொண்டால் அடுத்த தலைமுறைக்கு மகத்தான வாசலை அது திறக்கும்” என்றார்.
இன்றைய சூழலில் மட்டுமல்ல, எல்லா காலகட்டத்திலும் ஒரு சமூகம் தன்னை அறிவுத்தளத்தில் நிலைநிறுத்திக்கொள்வது மிக அவசியம். அதுவே வரலாற்றில் நாம் எங்கே இருக்கப்போகிறோம் என்பதை முடிவுசெய்யும். எம்ஒய்எம் நூலகம் வழிகாட்டுவது அதைத்தான்!
- முகம்மது ரியாஸ், தொடர்புக்கு: riyas.ma@hindutamil.co.in

(Courtesy - The Hindu Tamil dated 15th December 2019)

No comments:

Post a Comment