Friday, July 10, 2020

Alas Dr. Jaffer Sadiq is no more


*மனிதம் போற்றும் மாமனிதர் வாணியம்பாடி டாக்டர் ஜாபர் அவர்கள்*

தற்சமயம் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் டாக்டர் ஜாபர் அவர்களுக்காக இன்று அவரை அறிந்த ஒவ்வொரு இதயங்களும் பிரார்த்தித்த வண்ணம் துடித்த வண்ணம் ஆக இருக்கின்றது காரணம்

*அவரை அறிந்தவர்கள் நன்கு உணர்வார்கள் அவரைப் போன்ற ஒரு மருத்துவர் மட்டுமல்ல ஒரு மாமனிதர் இன்னொருவர் இந்த உலகில் இப்போது இருப்பதற்கு சாத்தியமில்லை*

25 ஆண்டுகால தனது பேராசையான ஒவ்வொரு மஸ்ஜிதிலும் பல்வேறு சேவைகள் நடைபெறும் சேவை மையங்களாக இருக்க வேண்டும் என்ற கனவை MSK மஸ்ஜித் சேவை குழு செயல்படுத்தி வருகிறது என்ற தகவலை தனது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து பார்த்து வந்த அவர்கள் என்னை தொடர்பு கொண்டு மஸ்ஜித் சேவை குழுவை வாணியம்பாடியில் துவங்க வேண்டும் தாங்கள் ஒரு நாள் என்னை வந்து சந்திக்க வேண்டும் என்று அழைப்பு கொடுத்தார்கள்.நான் இன்றே உங்களை சந்திக்கிறேன் என்று கூறி உடனடியாக அங்கே சென்றேன்.காரணம் அவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது நான் சென்னையிலிருந்து ஈரோட்டுக்கு வந்து கொண்டிருந்தேன் அந்த ரயில் வண்டி ஆம்பூரில் நின்றது.அவருடைய தொலைபேசியும் சரியான நேரத்தில் வந்த காரணத்தினால் உடனே இறங்கி அவர் வீட்டை நோக்கி வாணியம்பாடி சென்றேன். எனது ஆர்வத்தை பார்த்த அவர்கள் அவருடைய நீண்ட நாள் கனவை என்னிடம் பகிர்ந்து விட்டு மஸ்ஜித் சேவை குழுவை துவங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்கள்.

தன்னிடம் அறுவை சிகிச்சைக்காக வருகிற நோயாளிகளிடம் ஏழ்மை நிலையை கண்டால் நோயாளியின் முகவரியைப் பெற்றுக் கொண்டு அந்தப் பகுதியில் உள்ள மஸ்ஜித் சேவை குழு பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு உங்கள் ஊரில் இருந்து ஒரு நோயாளி என்னிடம் வந்து விட்டு சென்றார்கள் அவர்களை ஏழையாக நான் கண்டேன் அவர்கள் மூலம் எனக்கு கிடைத்த கட்டணத் தொகையை நான் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். மீண்டும் அந்த ஏழைக்கு உங்கள் சார்பாக நீங்கள் கொடுத்துவிடுங்கள் என்று கூறுவது அவரது வழக்கமாக இருந்தது. இது ஒரு முறை அல்ல பலமுறை நடந்தது

விருத்தசேதனம் என்கின்ற கத்னா செய்ய குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர்கள் வந்தால் அவர்களிடம் தாங்கள் எனக்கு செலுத்த வேண்டிய தொகையை உங்கள் ஊரில் உள்ள மஸ்ஜித் சேவை குழுவுக்கு நன்கொடையாக கொடுத்து விடுங்கள் அவர்கள் ஏழைகளுக்கு அதை உணவாக வழங்கி விடுவார்கள். எனவே நான் உங்களிடம் இருந்து எந்த கட்டணத்தையும் பெறவில்லை என்று கூறிவிடுவார்கள். அவர்களிடம் விருத்தசேதனம் செய்தாள் ஓரிரு நாட்களிலேயே குழந்தைகள் நடக்க ஆரம்பித்து விடும்

ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தில் தொடர்ந்து அவர்களின் பங்களிப்பு இருந்தது

திருப்பத்தூரில் மஸ்ஜித் சேவை குழு துவங்குவதற்கு அவர் மிக முக்கிய காரணமாக இருந்தார்

ஒருமுறை துபாய்க்கு சென்று துபாயில் உள்ளவர்களை ஒன்று கூட்டி இந்த மஸ்ஜித் சேவை குழுவை அவர்கள் அந்த நாட்டில் அறிமுகம் செய்து வைத்தார்கள்

அவருடைய அதிகமான கவனம் கணவன்-மனைவி ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்பதற்காக அடிக்கடி குடும்ப நல ஆலோச னைகளை தயாரித்து பள்ளபட்டி மற்றும் பல ஊர்களில் புதிய தம்பதிகளுக்கு வகுப்பு எடுப்பதில் மிகத் தீவிர ஆர்வம் காட்டி வந்தார்கள்

ஹஜ் பயணத்தின் போது ஹாஜிகளுக்கு சேவை செய்யும் நேரம் வந்துவிட்டால் முழுமையாக தன்னை அந்த சேவையில் அர்ப்பணித்துக் கொள்வார்கள்

உலமாக்கள் மீது அன்பும் உயர்ந்த மரியாதையும் என்றென்றும் வைத்திருந்தார்கள் காரணம் அவரும் ஒரு ஆலிமின் மகன்தான் மருத்துவராக இருந்தாலும் அவருடைய தோற்றம் வணக்க வழிபாடுகள் ஓர் முழுமையான ஆலிமுக்கு இணையாகவே இருந்தது

ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழன் கிழமை நோன்பு பிடித்து இந்த உம்மத்திற்கு துவா செய்த வண்ணம் இருந்தார்கள்

அவருடைய ஒரே லட்சியம் ஆலிம்களின் தலைமையில் உலகம் முழுவதும் உள்ள அனைத்து மசூதிகளிலும் மக்கள் சேவை நடைபெற வேண்டும் என்பதே அவர்களுடைய இலட்சியமாக இருந்தது.

ஒவ்வொரு நாளும் சம்பாதிப்பதை அன்றே தர்மம் செய்துவிட வேண்டும் என்று நினைக்க கூடியவர் .சேமிப்பின் மீது கொஞ்சம் கூட நம்பிக்கை அற்றவர். நாளைய பொழுது இறைவன் கையில் என்று நம்பி வாழ்ந்தவர்

இப்பொழுது கூட தனியார் மருத்துவமனையில் வைத்தியம் செய்யுங்கள் என்று கூறிய பொழுது அதற்காகும் செலவுகளை தர்மமாக செய்துவிடுங்கள் என்று கூறியதாகக் கேள்விப்பட்டேன் .

எவ்வளவு நெருக்கமான உறவாக, நண்பர்களாக இருந்தாலும் திருமணத்தை மஸ்ஜிதில் வைத்து நடத்தினால் மட்டுமே அவர்கள் கலந்து கொள்வார்கள். மண்டபத்தில் வைத்தால் அவர் கலந்து கொள்வதில்லை

ஏழ்மையில் உள்ளவர்களுக்காக எளிமையின் மொத்த உருவமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிற நம்முடைய பாசத்திற்குரிய டாக்டர் அவர்கள் விரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று எல்லாம் வல்ல அல்லாஹ்வை கண்ணீருடன் பிரார்த்திக்கிறேன்.

ஒரு குகைக்குள் மூன்று பேர்கள் அடைந்து கொண்டார்கள்.அதன் வெளியே ஒரு பெரிய கல் ஒன்று மூடிவிட்டது.அப்பொழுது ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையில் செய்த நற்காரியங்களை கூறி இறைவனிடம் பிரார்த்தித்தார்கள் அந்தக் கல் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தது . அதேபோல டாக்டர் அவர்கள் செய்த நற்காரியங்களை நாம் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு அல்லாஹ்விடம் முறையிடுவோம் அதன் மூலமாக அவர் முழுமையாக அந்த நோயில் இருந்து விடைபெற்று நீண்ட நாட்கள் மக்கள் பணியாற்றுவார் என்று நம்புகிறேன் அந்த அடிப்படையில் இந்த செய்தியை உங்களுக்கு நான் பகிர்கிறேன் இது அவரைப் பற்றி நான் அறிந்த ஒரு துளி மட்டுமே

பிரார்த்திக்கும் நெஞ்சம்

அலங்கியம்
சையது இப்ராஹிம்

தேசிய அமைப்பாளர் MSKமஸ்ஜித் சேவை குழு
ஈரோடு
10.7.2020




No comments:

Post a Comment